அதிகாரம்
கிராம ஊராட்சியை பொருத்தவரை காசோலை மூலம் ஊராட்சியின் பணத்தை எடுத்து செலவு செய்யும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே இருக்கிறது. குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்கள் கட்டாயமாக கிராம சபைக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
அந்தக் கூட்டத்தில் முந்தைய 3 மாதங்களில் நடைபெற்ற வரவு-செலவு கணக்கை முன்வைக்க வேண்டும். மக்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு ஊராட்சி தலைவர் பதிலளிக்க வேண்டும். அப்போது, பல்வேறு திட்டங்களின் பயனாளிகளின் பட்டியலையும் தெரிவிக்க வேண்டும். பயனாளிகளை தேர்வு செய்ய கிராம சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களிலும் ஆண்டிற்கு நான்கு முறை கூட்டப்படும் கிராம மக்களின் அவைக் கூட்டத்தில், கிராமங்களின் கல்வி, சமூக வளர்ச்சி, போக்குவரத்து, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற திட்டங்கள் குறித்தும், நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் குறித்த அறிக்கையையும் ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர் முன்னிலையில் பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். கிராமசபைக் கூட்டமே கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம் ஆகும்.
ஊராட்சிகளின் நிதி ஆதாரம்
கிராம ஊராட்சி நேரடியாக வசூலிக்கும் வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி, விளம்பர வரி, நூலக வரி மூலம் வருவாய் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், குடிநீர் கட்டணம், தொழில் உரிமக் கட்டணம், கட்டிடம் அல்லது மனைப்பிரிவு உரிமக் கட்டணம், கட்டிடக் குத்தகை, சந்தைக் குத்தகை, ஒப்பந்தப்புள்ளி பதிவுக் கட்டணம், வைப்புத் தொகைகள் ஆகியவற்றின் மூலமும் வருவாய் கிடைக்கிறது. இந்த சொந்த வருவாயில் செய்யப்படும் அனைத்து செலவுகளுக்கும் கிராமசபையின் ஒப்புதல் அவசியம்.
ஊராட்சி மன்றத்தின் பணிகள்
தெரு விளக்குகள் அமைத்தல்.
ஊர்ச் சாலைகள் அமைத்தல்
குடிநீர் வழங்குதல்.
கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல்.
சிறிய பாலங்கள் கட்டுதல்.
கிராம நூலகங்களைப் பராமரித்தல்.
தொகுப்பு வீடுகள் கட்டுதல்.
இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.
ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் ஊதியம்
ஊராட்சி தலைவருக்கு மதிப்பூதியமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள ரூ.200 அமர்வு படியாக வழங்கப்படுகிறது. இரண்டையும் சேர்த்து ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ.1,400 மட்டுமே ஊராட்சி தலைவருக்கு பணமாக வழங்கப்படுகிறது. ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு ஒரு கூட்டத்துக்கு அமர்வு படியாக ரூ.50 வழங்கப்படுகிறது. மாதந்தோறும் அதிகபட்சம் அவர்கள் ரூ.100 பெறலாம்.