திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவத மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தமிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர். இந்த மாவட்டத்தில் தென்மாதி மங்கலம் கிராமத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் 4560 அடி உயரம் கொண்ட பருவத மலை உள்ளது.
இந்த மலையில் மல்லிகார்ஜுனசாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அமாவாசை நாளிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள். வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்று இந்த கோவிலின் தல புராணம் கூறுகின்றது
பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு. இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும். இந்த மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்.