தை மாதம் ரதசப்தமி தினத்தன்று அண்ணாமலையார் கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வதை காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஈசனின் சாபத்துக்கு உள்ளான பார்வதி பூமிக்கு வந்து தவம் இருந்தார். பிறகு அவர் ஈசனிடம் இடப்பாகம் பெறுவதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நடந்து சென்றார். வழியில் அவருக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. இதை அறிந்த முருகப்பெருமான் தனது வேலாயுதத்தால் பூமியை கிழிக்க ஆறு உருவானது. அம்பாள் அதில் நீர் அருந்தி தாகத்தை தணித்தார். அந்த ஆறுதான் சேயாறு. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் திருவூடல் நடந்து அண்ணாமலையாரும், உண்ணாமலையம்மனும் ஊடல் துறந்து மகிழ்ச்சி பொங்க இந்த செய்யாற்றுக்கு வந்து தீர்த்தம் ஆடுவதாக சொல்கிறார்கள்.
செய்யாற்றுக்கு செல்லும்போது ஆற்றை கடக்கக்கூடாது என்ற ஐதீகம் இருப்பதால் மேட்டுப்பாளையம் கிராமம் வழியாக சுவாமி புறப்பாடு நடைபெறும். வழிநெடுக மக்கள் மண்டகப்படி நடத்தி அண்ணாமலையாரை வழிபடுவது இங்கு ஐதீகமாகும்.
சிறப்புமிக்க இந்த தீர்த்தவாரி திருவிழா இன்று கலசப்பக்கத்தில் நடைபெறுகிறது . இன்று இரவு முழுவதும் கலசப்பாக்கத்தில் அண்ணாமலையார் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்பு நாளை காலை திருவண்ணாமலைக்கு திரும்பும் வழியில் உள்ள அண்ணாமலையாருக்கு சொந்தமான தனகோட்டி புறத்திலுள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு தானமாக வழங்கிய பல ஏக்கர் விவசாய நிலத்தினை பார்வையிடுவார்.
புகழ் வாய்ந்த தீர்த்தவாரியின் சிறப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நமது கலசபாக்கம்.காம்‘ல் கண்டுகளிக்க தொடர்ந்து இணைந்திருங்கள்.