இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சமூக விரோதிகள் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர்களது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கோயில் நிலங்களை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிய சென்னை உயர் நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் அறநிலையத்துறை உயர்அதிகாரிகள் சட்ட வல்லுனர்களின் கருத்து கேட்டுள்ளனர். இது தொடர்பாக அரசிடம் பரிந்துரை செய்து இருப்பதாக தெரிகிறது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
இதைதொடர்ந்து, கோயில் செயல் அலுவலர்/தக்கார்/ ஆய்வர் ஆகியோருக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படுகிறது. இவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு புகார் மனு அளிக்க முடியும். இந்த புகார் மூலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க முடியும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்து அறநிலையத்துறை சட்டம் 79 பி (3)ன் கீழ் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.