திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் எரிந்த மகா தீப கொப்பரை கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா கடந்த நவ. 7-ம் தேதி துர்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. நவ.10-ம் கொடியேற்றமும் நடைபெற்றது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நவ.19-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் கோயில் தீப தரிசன மண்டபத்தின் முன்பாக ஆணும், பெண்ணும் சமம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிக்க அதேநேரத்தில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் தொடர்ந்து, 11 நாட்கள் எரிந்த மகா தீபத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மகா தீப தரிசனம் நேற்று முன்தினம் நிறைவு பெற்ற நிலையில் மலை உச்சியில் இருந்த தீப கொப்பரைக்கு நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், கோயில் ஊழியர்கள் கொப்பரையை தோளில் சுமந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வந்தனர். கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்ட தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்படும் மை வரும் 20-ம் தேதி ஆருத்ரா தரிசனத்தின்போது நடராஜருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.