புதுடெல்லி SKOCH நிறுவனம் சிறந்த மாவட்ட ஆளுமை, அரசு திட்டங்களின் செயல்பாட்டில் புதுமை புகுத்துதல், சிறப்பு சமூக நலப்பணிகள், மக்களிடையே விழிப்புணர்வினை தூண்டுதல் ஆகியவற்றிற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டங்களுக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் மட்டத்தினை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்துவதற்கு ஏதுவாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் 12.08.2021 முதல் 10.09.2021 முடிய உள்ள காலத்திற்குள் 2021-22 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்"CATCH THE RAIN CAMPAIGN" முனைப்பு இயக்கத்தில் 30 நாட்களுக்குள் 541 ஊராட்சிகளில் 1121 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டது.
மேலும், நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் 753 தடுப்பணைகள், சிறு குன்றுகளை பசுமை ஆக்குதல், மழைநீர் சேகரிப்புக்காக மலை பாங்கான இடங்களில் நீண்ட பள்ளங்களை அமைத்தல், பெருவாரியான மரங்கள் நடும் திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சமூக காடுகள் ஏற்படுத்தப்பட்டது.
மேற்குறிப்பிட்டுள்ள பணிகளை சிறந்த முறையில் செயல்படுத்தியதற்காக புதுடெல்லி SKOCH நிறுவனம் இந்திய அளவில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் செயல்பாட்டினை பாராட்டி 17.08.2022 நாளன்று இணைய வழி மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ் இ.ஆ.ப அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது.