தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டிருந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர். இந்த நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர் செல்வம் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார்.
கலசப்பாக்காம் எம்.எல்.ஏ பன்னீர் செல்வம் நேற்று முன் தினம் தனது தொகுதிக்கு உட்பட்ட கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர் போன்ற ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, ஜவ்வாது மலையடிவாரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக திறக்கப்படாமல் இருந்தது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.
இதனை பார்த்த எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், உடனடியாக பள்ளி சாவியை கொண்டு வர செய்து பள்ளியை திறந்து மாணவர்களுக்கு அவரே பாடம் நடத்தினார். பின்னர், அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் மாணவர்களுக்குக் பாடம் நடத்துமாறு அறிவுறுத்திவிட்டு கிளம்பி சென்றார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் நேற்று கலசப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.