கலசபாக்கம் அருகே பழங்கோவில்-பூண்டி ஊர்களை இணைக்கும் பாலம் கட்டும் பணி தொடங்கியது!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள பழங்கோவில் கிராமத்தில் 2300-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மழைக்காலங்களில் செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் நேரங்களில், இப்பகுதி மக்கள் பில்லூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஊர்களைச் சுற்றி வெளியூர் செல்லவேண்டியுள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கலசபாக்கம் அருகே உள்ள பூண்டி மற்றும் பழங்கோவில் கிராமங்களை இணைக்கும் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் கட்டப்பட்ட பின்னர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் பயணம் எளிதாகும். வியாபாரிகள் தங்கள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய வசதியாகும். பொதுமக்கள் தங்களது தினசரி வேலைகளுக்கு சிரமமின்றி சுலபமாகச் செல்லக்கூடிய சூழல் உருவாகும்.
மேலும், பழங்கோவில் கிராமத்தில் பழமையான ஆன்மீக தலங்கள் மற்றும் வரலாற்றுப் பின்புலம் கொண்ட பல முக்கிய இடங்கள் உள்ளன. இந்தப் பாலம் கட்டப்பட்டதன் மூலம் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு அதிக அளவில் வருகை தருவார்கள் என்றும், அதனால் இப்பகுதியில் பொருளாதார முன்னேற்றமும் மக்களின் வாழ்வாதார மேம்பாடும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.